காணாமல் போன கல்லூரி பேருந்தை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பாபா கோவில் பகுதியில் சர் ஐசக் நியூட்டன் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி என்ற கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கல்லூரிக்கு உரிய பேருந்து திருவாரூர் மாவட்டத்திலுள்ள, நன்னிலம் எனும் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரென காணாமல் போனதை கண்டு பேருந்த்தின் ஓட்டுனர் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் உடனடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின் கல்லூரி நிர்வாகத்தினர் நன்னிலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன கல்லூரி பேருந்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜீயபுரம் பகுதியில் ரோந்து சென்ற காவல்துறையினர் காணாமல் போன அந்த கல்லூரி பேருந்து திருப்பராய்த்துறை சுங்கச்சாவடி அருகே நிற்பதை கண்டு நன்னிலம் காவல்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் திருச்சிக்கு சென்று நன்னிலம் காவல்துறையினர் அந்த கல்லூரி பேருந்தை மீட்டுள்ளனர்.