திண்டுக்கல் அருகே ஓட்டல் ஊழியரிடம் தி.மு.க. கட்சியினர் பில் கொடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்ட சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் கே.ஆர்.ஆர் கலையரங்கம் உள்ளது. இந்த கலையரங்கம் பகுதியில் வாகனம் நிறுத்தும் இடம் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இந்த பகுதியில் உள்ளது. இந்த நிலையில் தி.மு.க. சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் பழனியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மேல்மலை கிராமப்பகுதி மற்றும் கொடைக்கானலில் இருந்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் வந்துள்ளனர். கே.ஆர்.ஆர் கலையரங்கம் பகுதி அருகே கணேசன் என்பவர் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் சாப்பிடுவதற்காக மேல்மலை கிராமத்திலிருந்து செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வந்த ஏழு தி.மு.க.வினர் வந்துள்ளனர்.
அவர்கள் குடிபோதையில் இருந்ததால் அசைவ உணவை வாங்கி சாப்பிட்டுள்ளனர். அவர்கள் மொத்தம் ரூ.1,060-க்கு சாப்பிட்டுள்ளனர். ஆனால் அந்த தி.மு.க.வினர் ரூ.460 மட்டுமே தர முடியும் என்று கூறியுள்ளனர். ஹோட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் முழு பணத்தையும் செலுத்துமாறு கூறியுள்ளனர். அதற்கு அவர்கள் தாங்கள் சிறிதளவு உணவு மட்டுமே உண்டதாகவும், நாங்கள் தி.மு.க. கட்சியை சேர்ந்தவர்கள் எங்களிடமே பணம் கேட்கிறாயா ? என்று கூறி ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளனர். அதனை கண்ட மற்ற ஊழியர்கள் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.