தேனி மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளன. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் மிக விரைவாக நடந்து வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, கடந்த 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையானார். ஆனால் அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நிலை தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளதால் மிக விரைவில் தமிழகம் திரும்புவார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சசிகலா விடுதலைக்குப் பிறகு தினமும் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இன்று தேனி ஆண்டிபட்டியில் சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில், “தமிழ் நாட்டை வழிநடத்த வருகை தரும் அதிமுக பொதுச் செயலாளர், எங்களின் ராஜமாதாவே வருக வருக!!” என குறிப்பிட்டுள்ளனர். இது அதிமுகவில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.