மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசலில் சுருக்குமடி வலையை பயன்படுத்த அரசு அனுமதி வழங்குமாறு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே கூழையார், திருமுல்லைவாசல், தொடுவாய் ஆகிய மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் 60-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 100-க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் ஆகியவற்றின் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். எனவே தொடுவாய், திருமுல்லைவாசல் ஆகிய கிராமங்களில் உள்ள மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்குமாறு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக கடற்பகுதியில் சுருக்குமடி வலையை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தத்தால் 60-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டது. விசைபடகுகளை நம்பியுள்ள ஏராளமான தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் வேலைக்குச் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது, யூனியன் பிரதேசங்கள் மற்றும் பிற மாநிலங்களில் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிநாட்டில் மட்டும் சுருக்குமடி வலையை பயன்படுத்துவதற்கு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மற்ற மாநிலங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளது போல் சுருக்குமடி வலையை பயன்படுத்த தமிழக அரசும் அனுமதி வழங்க வேண்டும் இல்லை என்றால் வருகின்ற சட்டமன்ற தேர்தலை நாங்கள் புறக்கணிக்க உள்ளோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.