பிரபல நாட்டில் பெய்த கனமழையால் மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த 4 மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தற்போது பாகிஸ்தான் மெல்ல மீண்டும் வரும் நிலையில் பல மாகாணங்களில் மலேரியா நோய் பரவி வருகிறது. கடந்த ஜூன் மாதம் முதல் மேக வெடிப்பு ஏற்பட்டு பல்வேறு மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அதில் குறிப்பாக ஆகஸ்டில் கொட்டிய கனமழையால் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் பல மாகாணங்கள் வெள்ளத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மழை தணிந்து ஒரு மாதம் கடந்தும் பல இடங்களில் நீர் வடியவில்லை. இதனால் தெற்கு பகுதிகளில் மலேரியா உள்ளிட்ட பல நோய்கள் பரவி வருகிறது.
மேலும் குடிநீருடன் கழிவு நீர் கலப்பதால் கடும் வயிற்றுப்போக்கு, டெங்கு, தோல் மற்றும் கண் நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மருத்துவமனை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். மேலும் பல மாகாணங்களில் வெள்ளம் வடியாததால் இரண்டு மாதங்களுக்கும் மேல் மக்கள் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசு மூலமாக கிடைக்கும் சிறிதளவு உணவு பொருட்களைக் கொண்டு காலத்தை கடத்தி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் வெள்ளம் தங்களது வீடுகள், உடைமைகளை அடித்து சென்று விட்டதால் அரசு மறுவாழ்விற்கு உதவ வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் வரலாறு காணாத வகையில் பாகிஸ்தானில் இதுவரை 1700 பேரின் உயிர்களை இந்த வெள்ளம் பறித்து சென்றுள்ளது. 550 பேர் சிறார்கள். மேலும் வெள்ளம் முற்றிலும் வடியாத நிலையில் அரசின் தற்காலிக கூடாரங்களில் சுமார் 6 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.