நீட் தேர்வுக்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டம் திமுக தலைமையில் கூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் இதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல் மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்து விட்டதாக ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதுதொடர்பாக விசிக தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் அதை குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டியது ஆளுநரின் கடமை.
ஆளுநர் அதை செய்யாமல் 4 மாதங்களாக கிடப்பில் போட்டு பின்னர் அதை தமிழக அரசுக்கே அனுப்பி வைத்துள்ளார். அதோடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப் படாமல் மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இதுவே முதல் தடவையாகும். எனவே இவ்வாறு பொறுப்பின்றி செயல்படும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். நீட் தேர்வு ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் வகையில் உள்ளது என தமிழக அரசால் அமைக்கப்பட்ட கே. ஏ.ராஜன் குழு தெரிவிக்கிறது.
இதனை ஆளுநர் மத்திய அரசுக்கு விளக்கமாக கூறி புரிய வைக்க வேண்டும் ஆனால் ஆளுநர் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் திருப்பி அனுப்பியுள்ளார். இது வன்மையாக கண்டிக்க படக் கூடிய ஒன்றாகும். இனி வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த மசோதாவை ஆளுநருக்கு மீண்டும் தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.