கணவன் மனைவி தகராறில் மனமுடைந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள காலனி ஆஸ்பத்திரி வீதியில் சௌந்தரராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். சாப்ட்வேர் இன்ஜினியரான இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், 7 வயதில் மகளும், 1 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில் சௌந்தர்ராஜன் வீட்டிலிருந்தவாறே வேலை பார்த்து வந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பூங்கொடி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சம்பவத்தன்று சௌந்தரராஜன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் வெகு நேரமாக கதவு திறக்கப்படாததால் சௌந்தரராஜன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பூங்கொடி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சௌந்தரராஜன் உடனடியாக பூங்கொடியின் பெற்றோருக்கு தகவல் தெரித்தார்.
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூங்கொடியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து பூங்கொடியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.