தரமான அரிசி வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலுள்ள ரேஷன் கடைகளில் அரசு சார்பில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக உள்ளது என்பது பொதுமக்களின் தொடர் குற்றச்சாட்டாக இருக்கிறது. இந்நிலையில் சீர்காழி பிடாரி வடக்கு வீதியிலுள்ள ஒரு ரேஷன் கடையில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி பழுப்பு நிறத்திலும், தரமற்றதாகவும் இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் போராட்டத்தின் போது, ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் அரிசி தரமாக இருக்கவேண்டும் என்றும், முறையாக கடைகளை திறக்க வேண்டும் என்றும், பொதுமக்களிடம் தரக்குறைவாகப் பேசும் பணியாளர்களின் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர். இதனால் சீர்காழியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.