மத்திய அரசு விரைவில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்திலுள்ள மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கண்டித்து தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை நேற்று உண்ணாவிரதப் போராட்டம் இருந்தார். கர்நாடகாவில் தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சி மேகதாதுவில் அணை கட்டும் முடிவில் உறுதியாக உள்ளது. மேகதாது அணைக்கு எதிராக தமிழக பாஜகவினரின் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது மேகதாது திட்டத்தில் சமரசத்திற்கு இடமில்லை. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அரசியல் நோக்கத்திற்காக அணை கட்டுவதை எதிர்க்கின்றனர். இந்த ஆணை குடிநீர் மற்றும் மின் உற்பத்தி திட்டத்திற்காக கட்டப்படுகின்றது. வறட்சி காலத்தில் அந்த நீரை பகிர்ந்து கொள்ள முடியும். மத்திய அரசு விரைவில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அதனால் நாங்கள் மேகதாதுவில் புதிய அணை கட்டுவது உறுதி. எந்த கட்சியாக இருந்தாலும், போராட்டம் நடத்தினாலும் நாங்கள் கவலைப்பட போவதில்லை. அதை நாங்கள் மனதில் கொள்ள போவதும் இல்லை என்று அவர் கூறினார்.