ஆசிரியைகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஹெல்த்கேம்ப் பகுதியில் இருக்கும் வட்டார கல்வி அலுவலகத்திற்கு அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் சிலர் வந்தனர். இந்நிலையில் அதிகாரிகளிடம் கடந்த ஜனவரி மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அப்போது வட்டார கல்வி அலுவலர்கள் அங்கிருந்து சென்றதால் கோபமடைந்த 13 ஆசிரியர்கள் மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும்போது, கடந்த ஜனவரி மாதம் வழங்க வேண்டிய சம்பளத்தை இதுவரை வழங்கவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் துறை இயக்குனரிடம் இருந்து உத்தரவு வரவில்லை என கூறுகின்றனர். எனவே நியாயம் கிடைக்கும் வரை அலுவலகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.