சுதந்திர தினத்தை முன்னிட்டு வீட்டில் கருப்பு கொடி ஏற்றிய மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆட்டுக்காரன்பட்டி அருந்தியர் காலணியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு கடந்த 1998-ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கூறிவிட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு காலனி பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு கொடி ஏற்றியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் வீடுகளில் ஏற்றிய கருப்பு கொடியை அகற்றியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.