பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாரை பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது குடும்பத்துடன் அரசுக்கு சொந்தமான இடத்தில் 80 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு தற்காலிகமாக இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை வீட்டுமனை பட்டா எண் மற்றும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து பட்டா வழங்கவில்லை. இதனால் அப்பகுதிமக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் உலகநாதன், ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத்தலைவர் தென்போஸ்கோ, ஒன்றிய கவுன்சிலர் வேலாயுதம், கிராம நிர்வாக அலுவலர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.