மாநிலங்களவை உறுப்பினரான தம்பிதுரை இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுகவிற்கு அம்மா ஜெயலலிதாதான் பொதுச்செயலாளர். அந்த இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. அதனால்தான் ஒருங்கிணைப்பாள,ர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டு கட்சிப் பணிகள் சிறப்பாக நடக்கிறது. ஜெயலலிதா எப்படி கட்சியை நடத்தினாரோ அப்படித்தான் இப்போதும் நடத்தப்படுகிறது.
ஐந்து வருடத்திற்கு ஒருமுறை பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும் அதற்காகத் தான் தற்போது கிளை கழக தேர்தல் நடக்கிறது. அதிமுக தலைமை கட்சியை சிறப்பாக வழிநடத்தி வருகிறது. பலமான சக்தியாக அதிமுக உள்ளது. யாரோ ஒருவர் கட்சியை விட்டு போகிறார் என்றால் அதனால் அதிமுகவிற்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. உடம்பில் அதிமுக ரத்தம் ஓடுபவர்கள் எந்த காலத்திலும் அதிமுகவை விட்டு போக மாட்டார்கள். அதிமுகவின் சொத்து தொண்டர்களும் பொதுமக்களும். தொண்டர்களும் பொதுமக்களும் இருப்பதால் அதிமுகவை அசைக்கவே முடியாது. யாரோ சிலர் கட்சி கொடியை பயன்படுத்துகிறார்கள், பொதுச்செயலாளர் பெயரை பயன்படுத்தினார்கள் என்றால் அவர்களை தலைவர் ஆகிவிட முடியாது என்று பேசியுள்ளார்.