பெரம்பலூரில் வாக்குசாவடி அலுவலர்கள் பயிற்சி வகுப்பு முடிந்த பின் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தலன்று குன்னம், பெரம்பலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு இரண்டாம் கட்டமாக பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. குன்னம் தொகுதிக்கு மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் பள்ளியிலும், பெரம்பலூர் தொகுதிக்கு கோல்டன் கேட்ஸ் பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் வாக்குச்சாவடிகளில் நிலை அலுவலர்கள் பயன்படுத்த உள்ள செல்போன் செயலி குறித்தும், வாக்குபதிவு அன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்திலிருந்து 525 வாக்குச்சாவடி அலுவலர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். சிலர் பயிற்சி வகுப்பு முடிந்த பின்பு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் கூறுகையில், பயிற்சி வகுப்பிற்கு செந்துறை ஒன்றியத்தில் இருந்து வந்தவர்களுக்கு, தேர்தல் பணி முடிந்து வீடு செல்வதற்கும், தேர்தல் அன்று வாக்குச்சாவடி செல்வதற்கும் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இந்த பயிற்சி வகுப்புகளை இனிவரும் தேர்தல்களில் எங்கள் பகுதியில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதன்பின் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.