ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் டிராவிட் ஆகியோர் செய்த செயலை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சிட்னியில் இன்று இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் பாகிஸ்தானும், நியூசிலாந்து அணியும் மோதுகிறது. அதன் பின் நாளை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன. இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் அடிலெய்டு மைதானத்தில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்..
முன்னதாக கடைசி லீக் போட்டியை ஆடிவிட்டு மெல்போர்னில் இருந்து அடிலெய்டுக்கு விமானம் மூலம் இந்திய அணி வீரர்கள் வந்தனர். இதில் விமானத்தில் பயணம் செய்த கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், விராட் கோலி ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிசினஸ் கிளாஸ் சீட்டுகளை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு விட்டுக் கொடுத்துள்ளனர். ஐசிசி விதிமுறைகளின் படி ஒவ்வொரு அணிக்கும் 4 பிசினஸ் சீட்டுகள் ஒதுக்கப்படும். அந்த சீட்டுகள் நவீன வசதிகள் கொண்டது. பிசினஸ் சீட்டுகள் அணியின் தலைமை பயிற்சியாளர், கேப்டன், துணை கேப்டன் அல்லது அணியின் மூத்த வீரர் ஆகியோருக்கு வழங்கப்படும்.
இந்நிலையில் வேக பந்துவீச்சாளர்களான முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ராகுல் டிராவிட், ரோஹித் சர்மா விராட் கோலி ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட பிசினஸ் சீட்டுகளை விட்டுக் கொடுத்துள்ளனர். ஏனென்றால் மெல்போர்னில் இருந்து அடிலெய்டுக்கு செல்வதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகும்.. இந்த இடைப்பட்ட நேரத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கால் வலி, முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு தான் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிசினஸ் கிளாஸ் சீட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொடுத்துள்ளனர்.
பிசினஸ் சீட்டில் காலை நீட்டி வசதியாக அமர்ந்து கொள்ளலாம். எனவே அவர்களுக்கு இது போதுமான இடம் கிடைக்கும். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு போட்டிக்கு முன் நல்ல ஓய்வு தேவை. அவர்கள் காலை நீட்டி ஓய்வு பெற வேண்டும் என நினைத்தோம் என்று இந்திய அணியின் துணை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். ரோகித் சர்மா விராட் கோலி, ராகுல் டிராவிட் ஆகியோரின் இந்த செயலை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.