இலங்கை அரசு ஒப்பந்தம் ஒன்றை ரத்து செய்ததை தொடர்ந்து உறுதிமொழியை கடைபிடிக்க வேண்டும் என இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது
இலங்கை அரசு கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கண்டெய்னர் முனையம் அமைக்க கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்தியா ஜப்பான் நாடுகள் செய்துவந்த நிலையில் திடீரென 9இந்த ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்தது. கொழும்பு துறைமுகத்தில் உள்ள தொழிற்சங்கங்களின் எதிர்ப்பின் காரணமாக இந்த ஒப்பந்தத்தை இலங்கை ரத்துசெய்துள்ளதாக கூறப்படுகிறது . இதுகுறித்து இந்திய தூதரக செய்தி தொடர்பாளர் அனைத்து தரப்பினரும் தற்போதுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உறுதிமொழிகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என கூறினார் .
இதனிடையே வெளியுறவுத்துறை மந்திரி தினேஷ் குணவர்த்தனே இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை இந்திய தூதர் சந்தித்து பேசி இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார் . இந்நிலையில் இந்திய அரசு சர்வதேச உறுதிமொழிகளை இலங்கை அரசு கடைபிடிக்கும்படி மீண்டும் வலியுறுத்தியது . இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில் “கொழும்பில் உள்ள இந்திய தூதர் இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேச உறுதிமொழிகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவம் குறித்து பேசியிருக்கிறார் .
இந்தியா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் முதலீட்டை கொண்டு எரிசக்தி மற்றும் துறைமுகங்கள் போன்ற துறைகளில் இலங்கையில் உள்கட்டமைப்பு மேம்படுத்துவது பரஸ்பர நன்மை தரும்’ என்று கூறினார். இதனிடையே கொழும்புத் துறைமுகத்தில் மேற்கு பகுதியில் கண்டைனர் முனையம் அமைக்கலாம் என்று இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது .