நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் கனிமொழி எம்.பி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “பாராளுமன்ற தேர்தலை விட உள்ளாட்சி தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை. ஏனெனில் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசுக்கு பக்கபலமாக துணை நின்று ஆட்சி நடத்த வழிவகை புரிவார்கள். அதிமுக அரசு தான் மிகச் சிறப்பான உள்ளாட்சியை கொண்டிருந்தது என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலை நடத்த தைரியமில்லாத எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு கூறுவது நியாயமற்றது. கடந்த பத்து வருட கால அதிமுக ஆட்சியில் எந்த நலத்திட்டங்களும் மக்களுக்கு செய்யப்படவில்லை.
கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தென் தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளித்து தொழிற்சாலைகள் தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களின் நலனுக்காக எதையுமே செய்யாத எடப்பாடி பழனிச்சாமி மக்கள் ஒருபோதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். அவருக்கு திமுக ஆட்சியைப் பற்றி குறை கூற எந்த தகுதியும் இல்லை.” என கனிமொழி கடுமையாக விமர்சனம் செய்தார்.