தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா?என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழுவை நியமித்து தமிழக அரசு கடந்த ஜூன் 19-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய அமைத்த குழுவுக்கு எதிரான கரு.நாகராஜன் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் இதற்கு வரவேற்பு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், இரட்டை வேட பா.ஜ.கவுக்கும் பாதம் தாங்கும் அ.தி.மு.கவுக்கும் ஐகோர்ட் அளித்த நெத்தியடி தீர்ப்பு என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஏ.கே ராஜன் குழுவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ததற்கு, நீட் தேர்வே ரத்து செய்யப்பட்டது போல முதல்வர் ஸ்டாலின் அறிக்கை விடுகிறார். எதிர்கட்சியான பிறகும் எங்களை பாஜகவின் பாதம் தாங்கி என்று நாகரீகம் இன்றி நஞ்சை கக்கி இருக்கிறார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஒவ்வொரு அடியையும் மிகவும் எச்சரிக்கையாக வைத்து செயல்பட்டோம் என்று தெரிவித்துள்ளார்.