விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒட்டனந்தல் கிராமத்தில் பஞ்சாயத்து என்ற பெயரில் வெறிபிடித்த ஆதிக்க சாதியினர் பட்டியல் இன மக்களை காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஓட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த பட்டியலின பொதுமக்கள் ஊரடங்கு காலத்தில் கோவில் திருவிழா நடத்தியது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததால், திருவிழாவை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். பின்னர் திருவிழா நடத்திய பட்டியலின மக்கள் காவல்நிலையத்தில் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் தங்களையும் மீறி திருவிழா நடத்தியதாக கூறி தாழ்த்தப்பட்ட அந்த பொதுமக்களை அந்த பகுதி அந்த ஊர் சாதி வெறி பிடித்த மக்கள் பஞ்சாயத்து என்ற பெயரில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லியுள்ளனர். இதையடுத்து வயதான முதியவர்கள் மூன்று பேர் அவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.