ஆந்திராவில் தம்பதிகள் இருவர் தங்கள் இரண்டு மகள்களையும் கொன்று நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள மதனப்பள்ளி சிவாலயம் என்ற பகுதியில் இருக்கும் ஆசிரியர்கள் காலனியில் வசிக்கும் தம்பதி புருஷோத்தம் நாயுடு மற்றும் பத்மஜா. மகளிர் கல்லூரியில் புருஷோத்தம நாயுடு துணை முதல்வராக பணியாற்றுகிறார். பத்மஜா மாஸ்டர் மைண்ட் என்ற பள்ளியில் முதல்வராக பணியாற்றிவருகிறார். இவர்களுக்கு அலேக்கியா (27) மற்றும் சாய் திவ்யா (22) ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
இதில் அலேக்கியா எம்பிஏ பட்டப் படிப்பு முடித்து விட்டு வட இந்திய மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறார். சாய் திவ்யா ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப்பள்ளியில் இசை பயின்று வருகிறார். இவர்கள் இருவரும் கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த 9 மாதங்களாக பெற்றோருடன் ஆந்திராவில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் புருஷோத்தம நாயுடு மற்றும் பத்மஜா ஆகிய இருவருக்கும் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உள்ளதால் சில நாட்களாகவே அவர்களது வீட்டில் விசேஷ பூஜைகளை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஏகாதசி என்பதால் வீட்டில் ரகசியம் சிறப்பு பூஜை ஒன்றை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் வீட்டில் இருந்து அலறல் சத்தம் வந்துள்ளது. இதனால் பதறிப்போன அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களது வீட்டின் கதவை தட்டியபோது கதவை திறக்க மறுத்து முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதனால் காவல்துறையினர் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து விட்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர்களின் இரண்டு மகள்களும் நிர்வாணமான நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவர்களது உடலை மீட்க முயன்றபோது புருஷோத்தம் தம்பதியினர் “இன்று இரவு மட்டும் பொறுத்திருங்கள், எங்கள் பிள்ளைகள் மீண்டும் உயிர்த்தெழுவார்கள் என்று கூறி அவர்களை தடுத்துள்ளனர்.
அதன் பிறகு அவர்களை உடனடியாக கைது செய்து இரண்டு பேரின் உடலையும் மீட்ட காவல்துறையினர் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களது மகள்கள் இருவரின் ஆடைகளையும் களைந்து நிர்வாணமாக்கி தலையில் மொட்டை அடித்து பூஜையில் அமர வைத்துள்ளனர். அதன்பின்பு உடற்பயிற்சி செய்வதற்கு பயன்படுத்தப்படும் டம்பெல்களையும் வைத்து இருவரின் தலையிலும் அடித்து கொலை செய்துள்ளனர்.
மேலும் இப்படி செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆயுள் கூடும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் அந்த தம்பதிகள் விசாரணை நடந்துகொண்டிருக்கையில் தங்கள் பிள்ளைகள் மீண்டும் உயிர்த்தெழுவார்கள் என்று கூறிக் கொண்டே இருந்துள்ளனர்.பள்ளி மற்றும் கல்லூரியில் முதல்வராக பணிபுரியும் பட்டபடிப்பு முடித்த இந்த தம்பதியினரே இதுபோன்ற மூட நம்பிக்கையில் ஈடுபட்டு சொந்த மகள்களையே கொன்ற சம்பவம் இந்தியா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.