திருவாரூர் மாவட்டத்தில் வீடுகளை காலி செய்ய நடவடிக்கை எடுக்க கூடாது என தாசில்தார் அலுவலகம் முன்பு பெண்கள் கதறி அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள கொருக்கை ஊராட்சியில் உள்ள கண்ணன் மேடு மேலத்தெருவில் சுமார் 110க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்துள்ளனர். அப்பகுதியில் வசிப்பவர்கள் விவசாயம் மற்றும் கூலித்தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த ஒருவர் மேல தெருவில் ஒருகாலத்தில் குளம் இருந்ததாகவும், அதனை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இதனையடுத்து இது அரசுக்கு சொந்தமான இடம் என்பதால் இந்த இடத்தினை காலி செய்ய வேண்டும் என அவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனை விசாரித்த நீதிபதி கண்ணன்மேடு மேலத்தெருவில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வீடுகளை காலி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் வையன்னா செந்தில் தலைமையில் அறப்போர் இயக்க தலைவர் அன்புமணி, பொறுப்பாளர்கள் என நிர்வாகிகள் பலரும் தாசில்தார் அலுவலகத்திற்கு நேற்று சென்று வீடுகளை காலி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாது என அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து நாங்கள் இந்த பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றோம், இந்நிலையில் இந்த இடத்தில் குளம் இருந்தது என்று கூறுவதும், நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் என கூறுவதும் நியாயமில்லை என கண்ணன்மேடு மேல தெருவில் வசிக்கும் பெண்கள் தெரிவித்துள்ளனர். எனவே நாங்கள் வசிக்கும் பகுதியை ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டு இந்த இடத்தில் நாங்கள் வாசிப்பதற்கான குடிமைப்பட்டா வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அங்கு வந்த பெண்கள் சிலர் தாசில்தார் அலுவலகம் வாசலில் வைத்து கீழே விழுந்து கையேந்தி கோரிக்கை விடுத்து கதறி அழுததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.