உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் ரஷ்ய வீரர்களின் பிடியில் சிக்கி இருப்பதால் அந்த நகரில் உள்ள சில பொதுமக்களும் உக்ரைன் ராணுவ வீரர்களும் அங்கு உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு தொழிற்சாலையில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் அசோவ்ஸ்டல் இரும்பு தொழிற்சாலையில் பதுங்கி உள்ள வீரர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனவும் அவர்களுக்கு சரணடைய ஒரு வாய்ப்பு கொடுங்கள் எனவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை உக்ரைன் வீரர்கள் ஏற்க மறுக்கும் பட்சத்தில் மொத்தமாக அந்த தொழிற்சாலையை மூடிவிடுங்கள் எனவும், அந்த தொழிற்சாலையில் இருந்து யாரும் வெளியே வராதவாறு செய்து விடுங்கள் எனவும் ரஷ்ய வீரர்களுக்கு புதின் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த தொழிற்சாலைக்குள் மாட்டியுள்ள அப்பாவி பொதுமக்கள் மற்றும் உக்ரைன் வீரர்கள் பலரும் உயிரிழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தொடர்ந்து நடைபெற்றுவரும் போரால் மரியுபோல் நகரத்தை சுற்றி சுமார் 9 ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதனை சாட்டிலைட் புகைப்படங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. இந்நிலையில் உக்ரைன் ராணுவ வீரர்கள் ரஷ்யாவுக்கு சவால் விடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் கேப்டன் ஸ்வயடோஸ்லாவ் பலமர் உரையாற்றியுள்ளார். அதில் “மரியுபோல் நகரில் கடைசி ராணுவ வீரன் உயிரோடு இருக்கும் வரை, மரியுபோல் நகரம் கண்டிப்பாக உக்ரைன் வசமே இருக்கும். ரஷியாவின் பொய் பரப்புரைகளுக்கு பதிலடி கொடுப்போம் என பகிரங்க சவால் விடுத்துள்ளார்..