சேலம் மாவட்டம் மோரூர் பகுதியில் பல்வேறு கட்சிகளின் கொடிக் கம்பங்கள் இருக்கின்ற நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கொடிக்கம்பங்கள் நட முயற்சி செய்தபோது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்று கூறி புதிய கொடிக்கம்பத்தை வைக்க தடை செய்தனர். இதனையடுத்து திருமாவளவன் நேரில் வந்த பிறகும்கூட காவல் துறையினர் இதற்கு அனுமதி மறுத்தனர்.
இதனால் காவல்துறையினர் மற்றும் விசிகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு காவல் துறையினர் தடியடி நடத்தினார்கள். இதன் பின்னர் திருமாவளவன் முதல்வர் முக ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து பேசினார். இதனையடுத்து இவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “தமிழக முதல்வர் மோரூரில் நடந்த கலவரத்தை குறித்து பேசுவதற்கு தயாராக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரை நேரில் சந்தித்து பேசினேன்.
விசிக.வின் கொடியை மட்டும் பறக்க விடுவதற்கு அனுமதி மறுக்கப்படுவது ஏன்? மேலும் தலித் மக்களுக்கு எதிராக சாதியவாத சக்திகளும், காவல்துறையினரும் செயல்படுகின்றனர். இதுகுறித்து முதல்வரிடம் கலந்துரையாடியதன் காரணத்தினால் சேலம், ஈரோடு மாவட்டத்தில் நடைபெறவிருந்த போராட்டமானது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற அடாவடி நிகழ்வானது எந்த ஆட்சியிலும் நடைபெற்றுக் கொண்டிருப்பது வாடிக்கையாகி போய்விட்டது” என்று கூறினார்.