போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து 10 கோடி ரூபாய் மதிப்பில் குளம் தூர்வாருதல், தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கான பொது ஏலம் நடை பெற்றது. இதில் சேலம், ஈரோடு மட்டும் இல்லாமல் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர். அப்போது வெளியூர் ஒப்பந்ததாரர்கள் வைத்திருந்த டெண்டர் படிவங்களை பழனி ஒப்பந்ததாரர்களின் ஆதரவாளர்கள் பறித்து தகராறு செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த வெளியூர் ஒப்பந்ததாரர்கள் பழனி-திண்டுக்கல் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேரையும் கைது செய்து அதே பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். அதன்பின்னர் அவர்கள் மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.