தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியில் ஒரு தனியார் பேருந்து நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் உரிமையாளர் பொதுமக்களிடம் தங்களது நிறுவனத்தில் இயங்கும் பேருந்துகள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களின் பெயரில் நிதி முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தஞ்சாவூர் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் தலா 5 லட்சம் வரை முதலீடு செய்திருக்கின்றனர். இந்த நிலையில் முதலீடு செய்தவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மாதம் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக லாபத்தொகை அவரவரது வங்கி கணக்கிற்கு வந்து சேர்ந்திருக்கிறது.
10 வருடங்களுக்கு மேலாக மேற்கண்ட நிறுவனம் எந்த புகாருக்கும் இடம் இல்லாமல் முதலீட்டாளர்களுக்கு லாபத்தில் பங்கு அளித்து வந்திருந்த நிலையில் கடந்த 2021 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் திடீரென இறந்துவிட்டார். இதனால் முதலீட்டாளர்களுக்கு லாபத்தில் பங்கு தொகை வழங்குவது நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் உரிமையாளரின் குடும்பத்தினரிடம் இது பற்றி கேட்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் இது பற்றி விவரம் எதுவும் தங்களுக்கு தெரியாது என கூறி இருக்கின்றனர். இதற்கு இடையே முதலீடு செய்யப்பட்ட பேருந்துகளின் பெயரில் வங்கிகளின் கடன் இருப்பதும் ஒரு பேருந்திற்கு ரூபாய் ஒன்றரை கோடிக்கு மேல் முதலீடு பெற்று இருப்பதும் தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் உரிமையாளர் இறந்த பின் மேற்கண்ட பேருந்து நிறுவனங்களின் பெயர்கள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
இதனை அறிந்து அதிர்ச்சிகுள்ளான முதலீட்டாளர்கள் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் மனு அளித்திருக்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்டிருப்பதாலும் தொகை அதிகமாக இருந்ததாலும் இது பற்றி திருச்சி மன்னார்குரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திருச்சி மன்னார்புரம் பகுதியில் இன்று காலை குவிந்துள்ளனர். அனைவரும் கைகளில் கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர். அதன் பின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்து சென்றனர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.