மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முழங்கால் போட்டு பெண் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரி கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட 279 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்று நடவடிக்கை எடுக்க அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டார். இந்நிலையில் கூட்டத்திற்கு வந்த ஒடுகம்பட்டி கிராமத்தை சேர்ந்த வெள்ளையம்மாள் என்பவர் திடீரென ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மன்னர் சிலை அருகே முழங்கால் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் வெள்ளையம்மாளை அழைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் வெள்ளையம்மாளின் அம்மா வசிக்கும் வீட்டிற்கு மின்சார இணைப்பு வழங்க கோரி பலமுறை அவர் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வெள்ளையம்மாள் போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஆட்சியரிடம் சென்று மனு அளிக்குமாறு கூறி அவரை அனுப்பி வைத்துள்ளனர்.