கர்நாடகாவில் நடப்பு ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. அந்தக் கூட்டத் தொடரின்போது மேகதாதுவில் அணை கட்டுவதற்காக 1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்காக 2022-23 பட்ஜெட்டில் ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டுள்ளது.
05.02.2007 அன்று நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பையும் 16.02.2018 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் மதிக்காமல் கர்நாடக அரசு இவ்வாறாக தன்னிச்சையாக செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு விஷயமாகும் கர்நாடக அரசின் இந்த முயற்சி சட்டமன்ற தேர்தலை முன்வைத்து அறிவிக்கப்பட்டதாக தோன்றுகிறது. எவ்வாறு இருப்பினும் தமிழக விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. கர்நாடக அரசின் இந்த முயற்சியை தடுத்து நிறுத்த தமிழகம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.