வேளாண் சட்டங்கள் குறித்து முழுமையாக தெரியும் என கூறும் மத்திய அமைச்சர்கள், பொதுவெளியில் விவசாயிகளுடன் விவாதிக்க தயாரா என டெல்லி முதல்வர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் திரு.மனிஷ் சிசோடியா உள்ளிட்டோர், நேற்று இரண்டாவது முறையாக, டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் உரையாற்றி திரு.அரவிந்த் கெஜ்ரிவால், கடும் குளிரில் ஒரு மாதத்திற்கும் மேலாக உயிரை பணையம் வைத்து போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு, விவசாயிகளை மத்திய அரசு தள்ளியதாக குற்றம் சாட்டினார்.
வேளாண் சட்டங்களால் ஏற்படும் நன்மைகளை கூற மறுக்கும் மத்திய அரசு, அச்சட்டங்கள் விவசாயிகளை பாதிக்காது என்று மட்டுமே பிரச்சாரம் செய்து வருகிறது என்றும் குற்றம் சாட்டினார். வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு புரிதல் இல்லை என கூறும் மத்திய அமைச்சர்கள், பொதுமக்கள் மத்தியில் விவசாயிகளுடன் நேரடியாக விவாதிக்க தயாரா என்றும் கேள்வி எழுப்பினார். அவ்வாறு விவாதம் நடத்தினால், வேளாண் சட்டங்கள் குறித்து யாருக்கு அதிகம் புரிதல் இருக்கிறது என தெரியவரும் என்றும், திரு.அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.