செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தமிழகத்தில் மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க ஒன்றிய அரசு 6,230 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த நிதியை தமிழகத்திற்கு உடனடியாக பிரதமர் மோடி அவர்கள் வழங்க வேண்டும்.
ஆயுள் சிறைவாசிகள், நீண்டகாலமாக சிறையில் சிறைப்படுத்தப்பட்டு இருப்போர், முன்விடுதலையாக ஓய்வு பெற்ற நீதியரசன் ஆதிநாதன் தலைமையில் குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.
இந்த குழு தமிழ்நாடு சிறைகளில் 10 மற்றும் 20 ஆண்டுகள் தண்டனை முடிந்தும் விடுதலை ஆகாமல் உள்ளவர்களையும், வயது மூத்தவர்கள், பல்வேறு இணை நோய்களுக்கு ஆட்பட்டவர்கள், உடல்நலம் குன்றிய சிறைவாசிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் நிலைமையை மனிதாபிமான அடிப்படையில் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அல்லது நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி முன்விடுதலைக்கு பரிந்துரை செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அரசாணைகள் மூலம் பயன்பெற முடியாத வாழ்நாள் சிறைவாசிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதற்கு வழிவகுக்கும் வகையில் இந்த குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அரசு அறிவித்துள்ளது. நீதி அரசர் ஆதிநாதன் குழு நீண்ட நாள் ஆயுள் கைதிகள் விடுதலை தொடர்பாக ஆராய்ந்து தக்க பரிந்துரைகள் அளிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
வேளாண்மைக்கு அடுத்து அதிக வேலைவாய்ப்பு உள்ள துறை ஜவுளித்துறை ஆகும். தமிழ்நாட்டில் 31 லட்சம் குடும்பங்கள் இந்த தொழிலை நம்பியுள்ளனர். இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 19 விழுக்காடு ஆகும். நாடு முழுவதும் உள்ள நூற்பாலைகளில் 45 விழுக்காடு தமிழகத்தில் உள்ளன. சென்ற ஆண்டு பருத்தி நூல்களில் ரூபாய் 210 கிடைத்தது, தற்போது 340 ரூபாய்.
அதாவது 60 விழுக்காடு உயர்ந்துள்ளது. ஜவுளித்துறைக்கு தீர்வுகாண…. நெருக்கடிக்கு தீர்வுக்காண முதல்வர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் முக்கிய மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார். ஊக வணிகத்தை தவிர்க்க ஏதுவாக, பருத்திக்கு விதிக்கப்படும் 11 விழுக்காடு இறக்குமதி வரியை நீக்க வேண்டும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மின்னணு ஏலத்தில் பங்குபெற எதுவாக தற்போது உள்ள விதிமுறைகளை தளர்த்தி குறைந்தபட்சம் 500 பருத்தி பேர்கள் போதுமானது என்ற வகையில் வணிக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சீரமைக்க வேண்டும்.
பருத்தியின் உச்சபட்ச பருத்தி கொள்முதல் காலமான டிசம்பர் முதல் மார்ச் வரை ஐந்து விழுக்காடு வட்டி மானியத்தை நூற்பாலைகளுக்கு விரிவுபடுத்த வேண்டும். தமிழ்நாட்டில் திருப்பூர், கோவை, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி தொழிலை பாதுகாக்க முதல்வரின் கோரிக்கைகளை ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்ற வேண்டும்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறை படுத்தப்பட்டு இலங்கை சிறையில் 68 தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களது விசை படகுகளை பறிமுதல் செய்துள்ளது சிங்கள கடற்படை. அது மட்டுமல்ல அவர்களை முற்களால் நிரப்பட்ட்ட சவுக்கால் அடித்து சித்திரவதை செய்துள்ளார்கள்.
புதுக்கோட்டையில் எங்கேயும் நடக்காத கொடுமை ஆகும். புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை கைது செய்து வவுனியா சிறையில் அடைத்துள்ளது இலங்கை அரசு. இலங்கை மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தம் தான், எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் மீது நடவடிக்கை தொடரும், பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகள் நாட்டுடைமையாக்கப்படும் என்று திமிராக அறிவித்துள்ளார்.
இதுவரையில் பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து நமது மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், மீனவர்களை கைது செய்வதும் பல வேளைகளிலேயே அவர்களை கொல்வதும் இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுவரை 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு ஒன்றிய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.