இ பாஸ் நடைமுறையை பொறுத்தவரையில் எந்த சமரசமும் கிடையாது என தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக 7ம் கட்ட நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி,
வெளிமாநிலங்கள் அல்லது மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமெனில் இ பாஸ் நடைமுறை என்பது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மற்ற மாநிலங்கள் அனைத்தும் இபாஸ் முறையை ரத்து செய்தாலும், தமிழகம் இன்னும் இந்த முறையை ரத்து செய்யாமல் உள்ளது. இது குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவிக்கையில், ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இ பாஸ் பெறுவது கட்டாயம். இந்த நடைமுறை தொடரும். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் என தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகள் யாவும் மக்கள் நலனுக்காக மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.