அரசியலில் இருந்து விலக உள்ளதாக சசிகலா அறிவித்திருந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி ஜெயலலிதாவின் சமாதியில் மரியாதை செலுத்திய மறுநாள் எம்ஜிஆர் இல்லத்திலும் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அப்பொழுது சசிகலா ‘கழக பொதுச்செயலாளர்’ என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்துள்ளது கடும் சர்ச்சையாகி உள்ளது. இதனால் இவரின் இந்த செயலுக்கு அதிமுகவினர் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக ஆளுநராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை இன்று சென்னை ராஜ்பவனில் வைத்து சந்தித்தார். அப்போது இவர்களுடன் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், சிவி சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்புக்குப் பின்னர் எடப்பாடி செய்தியாளர்களிடம் கலந்துரையாடினார். அப்பொழுது அவர், “நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் நிகழ்ந்த முறைகேடு குறித்து புகார் அளித்துள்ளோம். மேலும் நடைபெற இருக்கின்ற நகராட்சித் தேர்தல் நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தி உள்ளோம்.
மேலும் தூத்துக்குடியில் போக்குவரத்து காவலரை அமைச்சரின் உதவியாளர் ஒருவர் கன்னத்தில் அறைந்ததுள்ளது மிகவும் வேதனையான நிகழ்வாகும். மக்களின் பாதுகாவலருக்கே இந்த நிலை என்றால் மக்களின் நிலை என்ன?” என்று கேள்வி எழுப்பினார். இதன்பின் சசிகலாவை குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த எடப்பாடி, “சசிகலாவிற்கும் அதிமுகவிற்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது. ஆகவே சசிகலா மீது அதிமுகவின் சார்பில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வோம்” என்று தெரிவித்தார்