ஆந்திர மாநிலத்தில் உயிரிழந்த செல்லப் பிராணிக்கு வெண்கல சிலை வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவருமே தங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை குடும்பத்தில் ஒருவராகவே பார்த்து கவனித்து வருகின்றனர். அதுவும் மனிதர்களுடன் ஒன்றாக இணைந்து விளையாடுவது அவர்களுக்கு விசுவாசமாக இருப்பது போன்று வீட்டில் ஒருவராகவே அது வளர்ந்து வருகின்றது. அப்படி ஒரு விலங்கு நாய். நாய் எப்பொழுதுமே ஒரு நன்றியுள்ள பிராணி. தங்களை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு மிகவும் விசுவாசமாக இருக்கக்கூடிய ஒரு விலங்கு. ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா மாவட்டம் அம்பாபுரம்கிராமத்தில் தங்கள் வீட்டில் நாய் ஒன்றை அவர்கள் வளர்த்து வந்துள்ளனர்.
தனது பிள்ளைகளுக்கு நிகராக சுமார் ஒன்பது வருடங்களாக அந்த நாயை ஞானபிரகாஷ் வளர்த்து வந்துள்ளார். வீட்டிலுள்ள அனைவரிடமும் அது மிகவும் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வந்தது. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக அந்த நாய் பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் ஞானபிரகாஷ் குடும்பம் மொத்தமும் மிகவும் கஷ்டப்பட்டது. இதையடுத்து நான் இறந்த தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் ஏழை எளிய மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை ஞானப் பிரகாஷ் செய்து வந்தார்.
இந்த ஆண்டு 5 ஆவது நினைவு தினத்தையொட்டி வளர்ப்பு நாயின் உருவம் எப்பொழுதும் எங்கள் நினைவில் நீங்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக நாயின் வெண்கல சிலை ஒன்றை வைத்துள்ளார். அதன் நினைவு தினத்தையொட்டி அந்த உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “நாங்கள் வளர்ப்பு நாயை ஒரு குழந்தையைப் போன்று கவனித்துக் கொண்டோம். பல ஆண்டுகளாக நாங்கள் இந்த நாயை வளர்த்து வந்தோம். எங்களுக்கு மிகவும் விசுவாசமாக இருந்தது. அந்த நாய்க்கு எங்களால் செய்ய முடிந்த சிறிய செயல் இந்த வெண்கல சிலை தான்” என்று அவர் உருக்கத்துடன் தெரிவித்தார்.