சிவகங்கை கல்லல் அருகே ஒரே வகுப்பை சேர்ந்த 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் வேகமெடுத்து பரவிய கொரோனா சமீபகாலத்தில் குறைந்திருந்தது. இதையடுத்து சில வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் சில தினங்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஒன்பதாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் வருகின்ற 22-ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த மாணவர்களுக்கு இணையவழி மூலம் வகுப்புகள் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடன் படிக்கும் சக மாணவிகளுக்கும், மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது.
அதில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரே வகுப்பில் உள்ள மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வகுப்பறை முழுவதும் கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. அந்த பள்ளியில் படித்து வரும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பரிசோதனை செய்வதற்காக சிறப்பு முகாம் நடைபெற்றது. பணியாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பணியை சுகாதார பணிகள் இணை இயக்குனர் யசோதாமணி, மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.