வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த வெடிகள் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் 15 தினங்களுக்கு முன்பு பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியேறினார். ராஜாவும் அவரது குடும்பத்தினரும் தீபாவளி பலகார சீட்டு நடத்திவந்தனர். அதனால் சீட்டு போட்டிருக்கும் அனைவருக்கும் கொடுக்க பட்டாசு பெட்டிகளை வாங்கி வந்து நேற்று மாலை வீட்டில் அடுக்கி வைத்திருந்தார். இந்நிலையில் இரவு எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் வெடித்து உள்ளன.
இதனால் வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து பக்கத்தில் இருந்த இரண்டு வீடுகள் உட்பட மூன்று வீடுகளும் எரிந்து நாசமானது. அதோடு வீட்டில் இருந்த ராஜா மற்றும் அவரது நண்பர் பரிதாபமாக தீயில் சிக்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்த அவர்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அதிகாரிகளிடம் விபத்து தொடர்பாக கேட்டறிந்து விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.