Categories
மாநில செய்திகள்

எடப்பாடிக்கு 2 ஆப்ஷன்….. எதை தேர்ந்தெடுக்கப் போகிறார்….? பெரும் எதிர்பார்ப்பில் ஆதரவாளர்கள்….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றைத்தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி பெரும் பான்மையான நிர்வாகிகளின் ஆதரவோடு இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இவர் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி அவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்குவதாக அறிவித்தார். இதேபோன்று ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி மற்றும் கே.பி முனுசாமி ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.

அதன் பிறகு ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது எனவும், அதிமுகவில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றால் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்ட வேண்டும் எனவும், அவ்வாறு கூடும் கூட்டங்கள் மட்டுமே செல்லுபடி ஆகும் எனவும் அறிவித்தார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி பெரும் கலக்கத்தில் இருக்கும் நிலையில், ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்கு 2 விதமான யோசனைகள் தற்போது அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது ஓபிஎஸ் அனுமதியுடன் இபிஎஸ் பொதுக்குழுவை கூட்டி தீர்மானங்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொதுக்குழுவை கூட்ட ஓபிஎஸ் அனுமதி மறுத்தால் இபிஎஸ் உயர்நீதிமன்றத்தை நாடி தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுக் கொள்ளலாம். இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என மேல்முறையீடு செய்வது. இதில் எந்த வாய்ப்புகளை பயன்படுத்தி எடப்பாடி பழனிச்சாமி கட்சியை தன்வசப்படுத்திக் கொள்ளப் போகிறார் என்பதுதான் தற்போது அவரின் ஆதரவாளர்களின் கேள்வியாக இருக்கிறது.

Categories

Tech |