அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது.
அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. இதனால் தொண்டர்கள் இரு பிரிவாக பிரிந்துள்ளனர்.. இந்த சூழலில் கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அதிமுக பொது குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழுவை எதிர்த்து ஒ பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது.. இந்த விசாரணையின் போது தனி நீதிபதி யூகத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கி இருப்பதாக பழனிசாமி தரப்பு வாதிட்டது. மனுதாரர்கள் கோரிக்கை வைக்காமலேயே ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என தனி நீதிபதி நிவாரணம் அளித்தது அசாதாரணமானது என அவர் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் பன்னீர்செல்வம் தரப்போ பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாவிட்டால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விடும் என கட்சி விதிகளில் எங்கும் கூறப்படவில்லை என்று வாதிட்டது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர்.. தனிநீதிபதி தீர்ப்புக்கு பிறகு சசிகலா, தினகரன் ஆகியோரின் ஆதரவுடன் பன்னீர்செல்வம் தரப்பு புது தெம்புடன் பழனிச்சாமியை எதிர்த்து களத்தில் உள்ள நிலையில், அதிமுகவினர் பெரிதும் எதிர்பார்க்கும் இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று (செப்டம்பர் 2ஆம் தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது..