தமிழ்நாட்டில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத நேரத்தில் பா.ஜ.க. நுழைய முயற்சி செய்யும் கனவு பலிக்காது என்று திருமாவளவன் எம்.பி. பிரச்சாரத்தில் பேசினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., அகரம்சீகூர் கிராமத்தில் பெரம்பலூர் மாவட்ட குன்னம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பே திமுக கூட்டணி மு.க.ஸ்டாலின் தலைமையில் உருவாக்கப்பட்ட வெற்றி கூட்டணி ஆகும். தமிழகத்தை கடந்த ஐந்து வருடங்களாக அமித்ஷாவும், மோடியும் தான் ஆட்சி செய்கின்றனர். பா.ஜ.க ஜெயலலிதாவும், கருணாநிதியும் இல்லாத தமிழ்நாட்டில் நுழைய முயற்சி செய்கிறது.
பா.ஜ.க.வின் கனவு ஒரு போதும் பலிக்காது. திமுக கூட்டணிக்கு, மோடி தமிழகத்திற்கு வந்து செல்வது வெற்றி வாய்ப்பை அதிகரித்து கொடுக்கிறது. வேலைவாய்ப்பின்மை, பணமதிப்பிழப்பு, பொருளாதார நெருக்கடி போன்ற ஆபத்தான சூழ்நிலையில் பேராபத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. தக்சிணபிரதேசம் என்று தமிழகத்தின் பெயரை மாற்றம் செய்து விடுகிறார்கள். தமிழகத்தை மோடியிடம், எடப்பாடி பழனிசாமி அடமானம் வைத்து விட்டார். மேலும் 234 தொகுதியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் தி.மு.க.விற்காக உழைத்து வெற்றி பெற செய்ய வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.