சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா விடுதலை செய்யப்பட்டார். சசிகலா விடுதலை செய்யப்பட்டதை அடுத்து தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் விவாதங்கள், அதிமுக – சசிகலா என சென்று கொண்டிருக்கிறது.
குறிப்பாக அதிமுகவில் எந்த மாதிரியான மாற்றம் வரும் ? என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அதிமுக தலைமை சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஆனாலும் கூட்டணியில் இருப்பவர்கள் சசிகலாவுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா சசிகலாவுக்கு ஆதரவான கருத்து கூறிய நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்கள் முதல்வராக தேர்வு செய்யப்படவில்லை என அதிமுகவுக்கு அதிர்ச்சி அளித்தார். தற்போது கூட்டணி கட்சியாக இருந்த முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ்ஸும் இதே போன்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை என்பது தெரிந்த விஷயம் தான். பிரதமர் மோடியின் விருப்பத்திற்கு மாறாக வேறொரு வரை முதல்வராக கொண்டுவந்தவர் சசிகலா. அதிமுக தலைமை சசிகலாவிடம் சென்றுவிடக் கூடாது என மோடி, அமித்ஷா கவனமாக இருந்தனர்.
கூவத்தூரில் என்ன நடந்தது என அங்கிருந்த அனைவருக்கும் தெரியும். அதிமுகவிற்கு பின் பாஜக இருப்பது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, உண்மை ஒரு நாள் வெளியே வரும். பிரதமர் மோடி வல்லவராக இருக்கலாம், ஆனால் சசிகலாவை எளிதில் எடை போடக்கூடாது காத்திருங்கள்
என தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.