தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய புகாரின் மீது கர்நாடக முதலமைச்சர் திரு எடியூரப்பா மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து சமன் அனுப்புமாறு பெங்களூரு காவல் ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு இடைத் தேர்தல் நடைபெற்றபோது நவம்பர் மாதம் 23 ஆம் தேதி கோஹாக் பகுதியில் பாரதிய ஜனதா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கர்நாடக முதலமைச்சர் திரு பி.எஸ்.எடியூரப்பா தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் வாக்குகள் பற்றி விமர்சித்த பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் விதிமுறை மீறல் இல்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வழக்கு நடவடிக்கை கைவிடப்பட்டது.
இந்நிலையில் பெலாகவி மாவட்ட முதன்மை நீதியியல் நடுவர் மன்ற நீதிபதி வரிஷ் குமார் எடியூரப்பா மீதான சட்டபூர்வ நடவடிக்கை கைவிடப்பட்டதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். திரு எடியூரப்பா மீதான குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்கள் இருப்பதாகவும் மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் ,இந்திய தண்டனைச்சட்டம் ஆகியவற்றின் கீழ் அவர் மீது வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்தார். நீதிபதி இந்த வழக்கில் முதலமைச்சர் எடியூரப்பா மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யுமாறு பெங்களூர் மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலும் இது தொடர்பாக திரு எடியூரப்பாவிற்கு சம்மன் அனுப்புமாறு நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.