எட்டப்பர்களை வைத்து அதிமுகவை வீழ்த்த நினைத்தால் நடக்காது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்கூட்டத்தை நடத்த சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியதை தொடர்ந்து நேற்று முன்தினம் சென்னை வானகரத்தில் பொதுக்குழு நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் சிறப்பு தீர்மானத்தின் மூலம் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டன.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இன்று நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல விழாவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது “நம்மிடத்தில் எட்டப்பராக இருந்தவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டிருக்கின்றது. எட்டப்பர்களை வைத்து அதிமுகவை திமுக வீழ்த்த நினைத்தால் நடக்காது. அதிமுக தொண்டர்களால் உழைத்து உருவாக்கப்பட்ட கட்சி இது” என்று அவர் தெரிவித்தார்.