எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தின் மூலமாக ஆசிரியருக்கு பயிற்சி வழங்குவது தொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ள நிலையில் கருத்தாளர்கள் பயிற்சி நேற்று நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள் சரியாக செயல்படவில்லை. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே அதிக நாட்கள் கல்வி பயில வேண்டிய சூழல் ஏற்பட்டது.
போதிய அளவில் எழுத பயிற்சி கிடைக்காத மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1, 2, 3 ஆம் வகுப்புகளுக்கு 2022-23 ஆம் ஆண்டிலிருந்து எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மாநில அளவிலான பயிற்சி நடைபெற்று முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்ட மற்றும் வட்ட அளவிலான பயிற்சிகளில் அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் இணைந்து திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “1, 2, 3 வகுப்புகளுக்கு கற்பிக்கும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு உயர் தொழில் நுட்ப ஆய்வகம் அமையப்பெற்ற உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஜூன் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை 5 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் இணைந்து மாவட்டங்களில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அமைந்துள்ள பள்ளியை பயிற்சி மையமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மற்றும் கல்வியாளர்கள் அனைத்து நாட்களும் பயிற்சி நடைபெறும் இடத்தில் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.