தமிழில் ஆடுகளம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான டாப்ஸி தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் ஹிந்தியில் சமீபத்தில் டோபரா என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை. இந்நிலையில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை டாப்ஸி கலந்து கொண்ட போது அவரிடம் டோபரா படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறதே என்று நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு டாப்ஸி முதலில் படத்தை பார்த்துவிட்டு பேசுங்கள் என்றார். இதே கேள்வியை மீண்டும் அந்த நபர் கேட்டார். இதனால் டாப்ஸிக்கும் அந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன் பிறகு டாப்ஸி எதற்காக சத்தம் போடுகிறீர்கள். பிறகு நடிகர்கள் தவறானவர்கள் என்று கூறுவீர்கள். எந்த படங்கள் தான் விமர்சனங்களை பெறவில்லை. கேள்வியை நன்றாக யோசித்து கேளுங்கள் என்று கோபமாக கூறினார். ஏற்கனவே கோவா பட விழாவின்போது நடிகை டாப்ஸி ஆங்கிலத்தில் பேசியதற்கு ஒருவர் இந்தி மொழி படங்களில் நடிப்பதால் தாங்கள் ஹிந்தியில் பேசலாமே என்று கூறியதற்கு நான் தமிழ் படங்களில் கூட தான் நடிக்கிறேன் தமிழில் பேசவா என்று பதிலடி கொடுத்தார். மேலும் நடிகை டாப்ஸி டோபரா படத்தின் தோல்வியை தாங்க முடியாமல் தான் கோபமாக பேசியுள்ளார் என இணையதளங்களில் சிலர் கருத்து தெரிவித்த வருகின்றனர்.