சூர்யா நடிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம், வாடிவாசல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஜெய் பீம் திரைப்படம் வருகிற நவம்பர் 2-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸாக உள்ளது. மேலும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வினய் பேட்டி ஒன்றில் எதற்கும் துணிந்தவன் படம் டிசம்பர் மாதம் ரிலீஸாகும் என கூறியுள்ளார்.