எதிர்கட்சியினர் தொடர் முழக்கம் காரணமாக மக்களவையை நாளை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் நேற்று தொடங்கியது. இதில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டம் , கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
மேலும் டெல்லி வன்முறை குறித்து எதிர்க்கட்சிகள் அமித் ஷாவை ராஜினாமா செய்யக் கோரி கோஷமிட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. அதை தொடர்ந்து இன்று காலை மீண்டும் மக்களவை, மாநிலங்களவை கூடியது. இதிலும் டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் கூறினர்.
இதனை எதிர்த்து பாஜக எம்பிக்கள் வாக்குவாதத்தில் எடுப்பதால் அவையில் கூச்சல் நிலவியது. இதையடுத்து எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை 12 மணி வரையும், மாநிலங்களவை 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவை மீண்டும் தொடங்கிய நிலையில் டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சியினர் தொடர்ந்து முழக்கமிட்டனர். மேலும் மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா மீது எதிர்கட்சி உறுப்பினர்கள் ஆவணங்களை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஹோலி விடுமுறைக்கு பின்பு டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். ஆனாலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்ததால் மீண்டும் 3 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவை மீண்டும் தொடங்கிய போதும் எதிர்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கம் காரணமாக மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.