கருத்தரங்கத்தில் அனைத்து பெண்களின் நலனுக்காக ஆட்சியரிடம் கேள்வி கேட்ட பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர்.
பீகார் மாநிலத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் “அதிகாரம் பெற்ற பெண்கள் வளமான பீகார்” என்ற தலைப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் ஹரிஜோத் கெளர் பம்ரா கலந்து கொண்டார். அதன்பின்னர் அவர் பலர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஒரு பெண் குறைந்த விலைக்கு நாப்கின்களை அரசால் எங்களுக்கு வழங்க முடியாதா? என கேள்வி எழுப்பினார். இதனை கேட்ட அவர் இது போன்ற கேள்விகளுக்கு முடிவு உண்டா? நீங்கள் நாளைக்கு ஜீன்ஸ் பேண்டும், அழகான காலணிகள் என பல வசதிகையும் கேட்பீர்கள், அதன் பின்னர் குடும்ப கட்டுப்பாட்டு முறைக்கு அரசு அணுகுமுறை வழங்க வேண்டும் என கேட்பீர்கள் என்று அருவருப்பான பதிவுகளை அளித்துள்ளார்.
இவரின் இந்த பதில் அங்கிருந்த மாணவிகளையும், அதிகாரிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் விடாமல் ரியா குமாரி அரசை தேர்ந்தெடுக்க வாக்களிப்பது மக்கள்தானே? இவர்களின் வாக்குகள் தானே அரசை உருவாக்கியது என்ற மற்றொரு கேள்வியை எழுப்பியுள்ளார். அதற்கு ஹரிஜோத் கெளர் பம்ரா அப்படி எல்லாம் நினைத்துக் கொண்டிருந்தால் நீங்கள் அடுத்த தேர்தலில் வாக்களிக்க வேண்டாம். பாகிஸ்தான் போல மாறிவிடுங்கள் என்று மற்றொரு பகீர் பதிலளித்துள்ளார். மேலும் இது குறித்து ரியா குமாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது. நான் தவறாக எதையும் கேட்கவில்லை. ஏனென்றால் நாப்கின்களை என்னால் வாங்க முடியும். ஆனால் குடிசைகளில் வாழ்பவர்களால் வாங்க முடியாது. நான் எனக்காக மட்டும் கேட்கவில்லை. அனைத்து மாணவிகளுக்காகவும் தான் கேட்டேன்.
மேலும் நாங்கள் கோரிக்கை வைக்க தான் சென்றோம்.சண்டையிட அல்ல என்றார் . இதனையடுத்து ஹரிஜோத் கெளர் பம்ரா சமூக ஊடகங்களில் காணொளி காட்சி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் எனது வார்த்தைகள் யாரின் மனதையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். நான் யாரையும் அவமானப்படுத்தவோ, புண்படுத்தவோ நினைக்கவில்லை என அதில் கூறியுள்ளார். இவரின் இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் தில்லியை தலைமை இடமாகக் கொண்ட வெட் அண்ட் டிரை பெர்சனல் கேர் என்ற சுகாதார நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹரிஓம் தியாகி இந்த பெண்ணின் படிப்பிற்கு ஆகும் செலவை நிறுவனமே ஏற்க முடிவு செய்துள்ளோம். மேலும் அந்த பெண் எதிர்காலத்தில் வேறு ஏதாவது உதவியை விரும்பினால் அவளுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு நாங்கள் உதவி செய்வோம் எனவும் அவர் கூறியுள்ளார்.