சமீப காலமாக நாட்டில் வெறுப்பு கருத்துகள் தொடர்பாக பிரதமரின் அமைதி அதிர்ச்சியளிக்கிறது எனவும் வெறுப்பு கருத்துகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலை அளிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உட்பட 13 எதிர்க்கட்சித்தலைவர்கள் வெளியியிட்டுள்ள கூட்டறிக்கையில், “வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் செய்தி நிறுவனத்திற்கு அனுராக் தாக்கூர் அளித்துள்ள பேட்டியில், எதிர்க் கட்சிகள் நாட்டில் வெறுப்புவிதையை விதைத்து வருவதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார். அதன்பின் கேரளாவில் ஆர்எஸ்எஸ் தொண்டர் மரணம் தொடர்பாக அவர் பேசியதாவது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களால் அமைதியான முறையில் ஆட்சியை நடத்த முடியவில்லை.
அந்த மாநிலங்களில் சட்ட ஒழுங்கு நிலைமை மோசமாக இருப்பதாகவும் குற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தில் வன்முறை நடந்தபோது எதிர்க்கட்சித் தலைவர்கள் எங்கே இருந்தார்கள்..? என கேள்வி எழுப்பியுள்ள அனுராக் தாக்கூர், கடந்த வருடத்தில் ராஜஸ்தானில் இது போன்ற 60க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது என்று கூறினார். எனினும் கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அம்மாநில காங்கிரஸ் அரசு தவறியதை சோனியா காந்தி கவனிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.