தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 21-ஆம் தேதி தொடங்க இருப்பதால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் அதிமுக எம்எல்ஏக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி ஆலோசிக்கவும், சட்டமன்ற அதிமுக கொறடாவை தேர்ந்தெடுப்பதற்கும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடந்தது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சட்ட மன்ற செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். அதனைப்போலவே சட்டமன்ற அதிமுக கொறடாவாக எஸ்.பி வேலுமணி, துணை கொரடாவாக அரக்கோணம் ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் சட்டமன்ற அதிமுக பொருளாளராக கடம்பூர் ராஜு, செயலாளராக அன்பழகன் மற்றும் துணை செயலாளராக மனோஜ் பாண்டியன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.