சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் வாகனத்திலிருந்த ரேஷன் அரிசி மூடைகள் சாலையில் சிதறின.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவிலில் இருந்து பரமகுடி நோக்கி சரக்கு வாகனம் ஒன்று ரேஷன் அரிசியை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது மறவமங்கலம் அருகே அந்த வாகனம் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. அதில் பரமக்குடி அருகில் உள்ள எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் சிவகணபதி மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தார்.
அவருக்கு இந்த விபத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இந்த விபத்தில் சரக்கு வாகனம் எதிர்பாராமல் சாலையில் கவிழ்ந்தது. மேலும் 58 மூடை ரேஷன் அரிசி சாலையில் சிதறியது. அதில் சரக்கு வாகனத்தை ஓட்டிவந்த டிரைவரான போஸ் என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் படுகாயமடைந்த கணபதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.