சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சரக்கு வாகனம் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ரேஷன் அரிசி மூடைகள் சிதறி கிடந்தன.
சிவகங்கை மாவட்டத்தில் சரக்கு வாகனம் ஒன்று மானாமதுரையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதையடுத்து அந்த வாகனம் பாப்பான்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் வாகனத்தில் இருந்த அரிசி மூட்டைகள் சாலையில் சிதறி விழுந்தன. அந்த வாகனத்தின் டிரைவர் சங்கரபாண்டியன் (24) அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து அவர் அரிசி மூடைகளை அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி அதில் ஏற்ற முயற்சி செய்துள்ளார்.
அதனை கண்ட அப்பகுதி மக்கள் ரேஷன் அரிசி கிடப்பதைக் கண்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்புவனம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உணவு கடத்தல் பிரிவு காவல்துறையினர் அங்கு இருந்த 40 ரேஷன் அரிசி மூடைகளையும் கைப்பற்றி அதன் பின் அரசு குடோனில் ஒப்படைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரும், திருபுவனம் காவல்துறையினரும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.