சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சாலையின் குறுக்கே சென்ற மின்சார கம்பி தென்னை மஞ்சியில் பட்டு தீப்பிடித்ததில் சரக்கு வாகனம் சேதமடைந்தது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புனரி செல்வ விநாயகர் கோவில் தெருவில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவர் விராலிமலைக்கு சென்று கயிறு திரிக்க பயன்படும் தென்னை மஞ்சி கட்டுகளை தனக்கு சொந்தமான சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். எம்.கோவில்பட்டி அருகே வாகனம் வந்து கொண்டிருந்தபோது மின்சார கம்பி ஒன்று சாலையின் குறுக்கே சென்றது. அது தென்னை மஞ்சியில் பட்டு பிடித்து எரிய ஆரம்பித்தது.
அதை அறிந்த பாலு குடியிருப்பு பகுதியில் சரக்கு வாகனத்தை நிறுத்தாமல் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் காட்டு பகுதிக்கு வந்து நிறுத்தினார். அதன்பின் வாகனத்திலிருந்து கீழே இறங்கி குதித்து தப்பினார். அதற்குள் தென்னை மஞ்சி முழுவதும் மளமளவென பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் சரக்கு வாகனம் சேதம் அடைந்தது.